சனி, 11 ஆகஸ்ட், 2012

5. குதம்பைச் சித்தர்



பிறந்த மாதம்: ஆடி
பிறந்த நட்சத்திரம்: விசாகம்
வாழ்ந்த காலம்: 1800 வருடம் 16 நாள்
சமாதியான இடம்: மாயவரம்


குதம்பை என்பது பெண்களின் காதிலே அணியும் தொங்கட்டான் நகை. இவர் பாடல்களில் குதம்பை அணிந்த பெண்ணை குதம்பாய் என்று அழைக்கிறார். இதனால் இவரை குதம்பைச் சித்தர் என்றே அனைவரும் அழைத்தார்கள். இவர் 32 பாடல்களைப் பாடியுள்ளார்.
யாதவ குலத்தில் கோபாலர் தம்பதிகளுக்கு ஆடிமாத விசாக நட்சத்திரத்தன்ற்ய் மிக அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அது ஆண் குழந்தையாக இருந்தாலும் அதன் அழகு பெண் குழந்தையைப் போலிருக்கவே அக்குழந்தையின் காதில் அசைந்தாடும் குதம்பை என்னும் நகையை அணிவித்தாள் குழந்தையின் தாய். குதம்பையின் தினசரி நிகழ்ச்சி காலையும், மாலையும் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்குவது தான்.
குதம்பைச் சித்தருக்கு பதினாறு வயதாகும் போது அவருக்கு ஞான உபதேசம் செய்வதற்காக மாதவர் ஒருவர் வந்தார். வந்தவரை வணங்கி நின்றார் குதம்பை. மாதவர் குதம்பைக்கு அருளுபதேசம் செய்தார். “மாதவ குருவே உபதேசம் செய்த உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன்!” என்றார் குதம்பை மாதவரோ குதம்பையை மெல்ல தடவிக்கொடுத்து “குதம்பை நீ போன பிறவியில் உய்வடையும் பொடுட்டு கடுந்தவம் செய்தாய். ஆனால் தவம் முழுமை அடையும் முன்பே உன் காலம் முடிந்து நீ இறந்து போனாய். அந்தத் தவத்தின் பயனால் தான் நீ என்னிடம் உபதேசம் பெற்றாய். நான் உபதேசித்ததை அனுபவத்தில் கொண்டு வெற்றி பெறுவாய்” என்றார்.
ஒரு நாள் இரவு குதம்பைச் சித்தர் யாருக்கும் தெரியாமல் எழுந்து ஒரு காட்டிற்குள் புகுந்தார். அங்கிருந்த ஒரு மரப்பொந்தில் நுழைந்து தவ நிலையில் ஆழ்ந்தார். தம் அனுபவங்களைப் பாடல்களாக எழுதினார். அந்தப் பாடல்கள் தான் குதம்பைச் சித்தர் பாடல்களாக உள்ளன.

குதம்பைச் சித்தர் வரலாறு முற்றிற்று.

4. திருமூலர்




பிறந்த மாதம்: புரட்டாசி
பிறந்த நட்சத்திரம்: அவிட்டம்
வாழ்ந்த காலம்: 3000 வருடம் 13 நாள்
சமாதியான இடம்: சிதம்பரம்


சித்தர்களில் முதன்மையானவர். சிவபெருமானிடமும், நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். அஷ்ட்டமா சித்திகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். இவர் அகத்தியரிடம் கொண்ட அன்பால் அவருடன் சிலகாலம் தங்குவதற்கு எண்ணி, தான் வாழ்ந்த திருக்கைலையிலிருந்து புறப்பட்டு பொதிகை மலையை அடையும் பொருட்டு தென் திசை நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் திக்கேதாரம், பசுபதி, நேபாளம், அவிமுத்தம் (காசி) விந்தமலை, திருப்பருப்பதம், திருக்காளத்தி, த்ருவாலங்காடு, காஞ்சி ஆகிய திருத்தலங்களைத் தரிசித்து ஆங்காங்கே இருந்த சிவயோகிகளைக் கண்டு அளவளாவி மகிழ்ந்தார்.
பிறகு தில்லையில் இறைவன் அற்புதத் திருக்கூத்தாடியருளும் திருநடனம் கண்டு மகிழ்ந்த சிவயோகியார், திருவாவடுதுறை இறைவனை வழிபட்டுச் செல்லும் போது காவிரிக் கரையிலுள்ள பொழிவினிடத்தே பசுக் கூட்டங்கள் கதறி அழுவதனைக் கண்டார்.
அந்தணர்கள் வாழும் சாத்தனூரிலே ஆநிரை மேய்க்கும் ஆயனாகிய மூலன் என்பவன் அங்கு தனியே வந்து பசுக்களை மேய்ப்பவன். அவன் தன் விதி முடிந்த காரணத்தால் உயிர் நீங்கி இறந்து கிடந்தான். மூலன் இறந்ததைக் கண்ட பசுக்கள் அவனது உடம்பினைச் சுற்றிச் சுற்றி வந்து வருந்தி கண்ணீர் விட்டன.
பசுக்களின் துயர்கண்ட சிவயோகியார்க்கு அவற்றின் துன்பம் துடைக்க எண்ணம் உண்டாயிற்று. எனவே தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்திவிட்டு, கூடு விட்டு கூடு பாய்தல் (பரகாயப் பிரவேசம்) என்னும் பவன வழியினாலே தமது உயிரை அந்த இடையனது உடம்பினுள் புகுமாறு செலுத்தித் திருமூலராய் எழுந்தார்.
மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் மகிழ்ந்து அன்பினால் அவரது உடலினை நக்கி, மோந்து, களிப்போடு துள்ளிக் குதித்தன. திருமூலர் மனம் மகிழ்ந்து பசுக்களை நன்றாக மேய்த்தருளினார். வயிரார மேய்ந்த அப்பசுக்கள் காவிரியாற்றின் துறையிலே இறங்கி தண்ணீர் பருகி கரையேறி சாத்தனூரை நோக்கி நடந்தன. அவற்றைத் தொடர்ந்து சென்ற சிவயோகியார் பசுக்கள் தத்தம் வீடுகளுக்குச் சென்றதைக் கண்டார். அதே சமயம் வீட்டிலிருந்து வெளியே வந்த மூலனின் மனைவி, மூலன் வடிவிலிருந்த சிவயோகியரை வீட்டிற்கு அழைத்தாள். திருமூலரோ தான் அவளுடைய கணவன் அல்லன் என்றும், அவன் இறந்துவிட்டான் என்றும் கூறினார். அவள் அவ்வூர்ப் பெரியவர்களிடம் முறையிடவும், மூலர் தான் ஏற்றிருந்த உடலிலிருந்து விலகி தன் ஒரு சிவயோகியார் என்பதை நிருபித்தார். மறுபடியும் மூலனின் உடம்பில் புகுந்தார். இதைக்கண்ட சான்றோர்கள் மூலனின் மனைவியைத் தேற்றி ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.
சிவயோகியர் தன் உடலைத் தேடிச் சென்று அது கிடைக்காததால் மூலனின் உடலிலேயே தங்கி திருவாவடுதுறைத் திருக்கோவிலை அடைந்தார். யோகத்தில் வீற்ற்ருந்து, நன்னெறிகளை விளக்கும் ‘திருமந்திரம்’ எனும் நூலை ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இவரது வரலாற்றை சேக்கிழாரடிகள் பெரியபுராணத்தில் விரிவாகக் கூறியுள்ளார்.
எல்லாம் வல்ல பரம்பொருள் அன்பே உருவானவர் என்பதை தம் பாடல் மூலம் விளக்குகிறார். அப்பாடல் பின் வருமாறு

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"

திருமூலரின் 16 சீடர்களில் காலங்கி சித்தரும், கஞ்சமலைச் சித்தரும் முக்கியமானவர்கள். பாண்டிய மன்னனின் ஆணைப்படி திருமூலர் சமாதியை மூலவராகக் கொண்டு, கருவூரர் சிதம்பரம் கோயிலை அமைத்தார். திருமூலர் லிங்க வடிவமாக எழுந்தருளிய இடம் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய இடமாக கற்பிக்கப்பட்டு உமா பார்வதி என்ற பெயரில் ஒரு அம்மன் சந்நிதியும் இக்கோயிலில் சேர்த்துவிட்டார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருமூலர் வரலாறு நிறைவுற்றது.

3. கமலமுனி


பிறந்த மாதம்: வைகாசி
பிறந்த நட்சத்திரம்: பூசம்
வாழ்ந்த காலம்: 4000 வருடம் 48 நாள்
சமாதியான இடம்: திருவாரூர்


காலங்கி நாதர் திருமூலரின் முக்கியமான சீடர். சொல்வதை விட கேட்பதே சிறந்தது என்ற கொள்கை உடையவர். அவர் பல சித்தர்களை தேடி சென்று பல தகவல்களை அறிந்தவர் என்று கூறப் படுகிறது.
குண்டலினி யோகத்தில் தேர்ந்து தெளிந்ததினால் காலங்கி நாதருக்கு கமலமுனி என்றொரு பெயரும் உண்டு.

2. பதஞ்சலி


பிறந்த மாதம்: பங்குனி
பிறந்த நட்சத்திரம்: மூலம்
வாழ்ந்த காலம்: 5 யுகம் 7 நாள்
சமாதியான இடம்: இராமேஸ்வரம்

இவர் “பிரம்மதேவரின் கண்ணிலிருந்து தோன்றிவரும், சப்தரிஷி மண்டலத்தில் முதலாவது நட்சத்திரமாக பிரகாசிப்பவருமான அத்திரி மகரிஷிக்கும், மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிய அனுசுயா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர். ஆதிசேடனின் அவதாரமாகத் தோன்றியவர். ஆதலினால் பதஞ்சலி முனிவரின் கடும் விஷமூச்சிக்காற்று பட்ட அனைத்தும் சாம்பலாகிவிடும். எனவே இவர் தம் சீடர்களுக்கு அசரீரியாகவே உபதேசம் செய்வார்.
தில்லையம்பல பஞ்சசபைகளில் ஒன்றாகிய ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அமர்ந்து தாம் இயற்றிய “வியாகரண சூத்திரம்” என்னும் நூலை தம்முடைய சீடர்களுக்கு தாமே நேருக்கு நேராய் உபதேசிக்க வேண்டும் என்ற ஆவல் திடீரென்று உண்டாயிற்று. கௌட பாதர் என்னும் சீடர் மட்டும் பதஞ்சலி ஏவிய பணிநிமித்தமாக் வெளியே சென்றிருந்தார்.
இத்தனை காலமாக அரூவமாக உபதேசித்துவந்த பதஞ்சலி நேருக்கு நேராக உபதேசிக்க உபதேசித்து ஒரு முடிவுக்கு வந்தார். தமக்கும் தம் சீடர்களுக்கும் இடையே ஒரு கனமான திரையை போட்டுக்கொண்டார். திரையின் பின் அமர்ந்து ஆதிசேட உருவில் கடும் விஷகாற்று கிளம்ப பதஞ்சலி முனிவர் “வியாகரண சூத்திரத்தை” உபதேசித்தார். சீடர்களுக்கு பரமானந்தம். இத்தனை நாள் அசரீரியாய் கேட்ட குருவின் குரலை மிக அருகில் கேட்டு மகிழ்ந்தனர். உவகை பொங்க பலரும் தங்களுக்கு உண்டான சந்தேகங்களைக் கேட்டனர்.
வெண்கல மணியோசை போல முனிவரின் குரல் பதிலாக வந்தது. “குருநாதரே தவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்” என்றார் ஒரு சீடர்.
“உடல் ஐம்புலன்கள் மூலம் வெளியில் பாய்வதைக் கட்டுப்படுத்துவதே தவம். மேலும் சுகம், துக்கம் இரண்டையும் கடக்கவும் வசப்படுத்துவும் செய்யப்படும் சடங்கே தவம்” என்றார்.
“குருதேவரே இந்த உலகில் பரகாயப் பிரவேசம் சாத்தியமா?” என்று கேட்டார் இன்னொரு சீடர்.
“பஞ்ச பூத ஜெயத்தால், அணிமா, மஹிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, வசித்துவம், பிரகாமியம், ஈசத்துவம் ஆகிய அஷ்டமா சித்திகளை அடையலாம். சித்தர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்” என்றார் பதஞ்சலி.
பதஞ்சலி முனிவரிடமிருந்து தடையின்றி வந்த கருத்து மழையில் திக்குமுக்காடிய சீடர்களுக்கு இந்த கம்பீரக் குரலுக்குரிய குருநாதரின் திருமுகத்தினை ஒரு கணம் திரை நீக்கிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆவலால் திரையைப் பிடித்து இழுக்க, திரை விலகியது. அடுத்த கணம் ஆதிசேடனின் ஆயிரம் முகங்களிலிருந்து வெளிப்பட்ட கடும் விஷ மூச்சுக்காற்று தீண்டி அங்கிருந்த அத்தனை சீடர்களும் எரிந்து சாம்பலாயினர்.
முனிவர் எதை நினைத்து இத்தனை நாளும் பயந்தாரோ அது நடந்து விட்டது. அது சமயம் வெளியில் சென்றிருந்த கௌடபாதர் வருவதைக் கண்ட முனிவர் அவர்மீது மூச்சுக் காற்று படாமல் இருக்க உடனே மானுட உருவத்திற்கு மாறினார். நடந்ததை யூகித்த கௌடபாதர் “என் நண்பர்கள் அனைவரும் இப்படி சாம்பலாகிவிட்டனரே” என்று கண்ணீர் வடித்தார்.
“குருவின் ரகசியத்தை அறிய திரையை விலக்கியதால் வந்த விபரீதம் இது. இத்தனைநாள் பொறுமை காத்தவர்கள் இன்று அவசரப்பட்டு விட்டார்கள். கௌடபாதரே நீர் மட்டும்தான் எனக்கு சீடனாக மிஞ்ச வேண்டும் என்பது விதி எனவே மனதைத் தேற்றிக்கொள். உனக்கு நான் சகல கலைகளையும் கற்றுத்தருகிறேன். உன்னுடைய இப்போதைய நிலைக்கு தேவை தியானம். தியானம் கைகூடியதும் சமாதிநிலை உண்டாகும்” என்றார் பதஞ்சலி.
படிப்படியாக கௌடபாதருக்கு வித்தகளணைத்தும் கற்றுக்கொடுத்தார். பதஞ்சலி முனிவர் யோகத்தில் ஆழ்ந்து மூலாதாரத்தின் கனலை எழுப்பி யோக சாதனை புரிந்த போது, குருநாதரின் ஆதிசேட அவதாரத்தின் ஆனந்த தரிசனம் கண்டு மெய்சிலிர்த்தார் கௌடபாதர்.

18 சித்தர்கள்

  1. அகத்தியர்
  2. பதஞ்சலி
  3. கமலமுனி
  4. திருமூலர்
  5. குதம்பை சித்தர்
  6. கோரக்கர்
  7. தன்வந்திரி
  8. சுந்தரானந்தர்
  9. கொங்கணர்
  10. சட்டைநாதர்
  11. வான்மீகர்
  12. இராமதேவர்
  13. சிவவாக்கியர்
  14. இடைக்காடர்
  15. மச்சமுனி
  16. போகர்
  17. கருவூரார்
  18. பாம்பாட்டி சித்தர்

சித்தர்கள் யார்?

கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்றும் கூறுவர். இல்லற வாழ்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தை விட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்த உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்கள் ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தில் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம்.
நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுகேரிபோன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்து பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளை உடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்கள் இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் இராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!! 
சித்தர்களை வெளிதோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவது இல்லை. ஆனால் மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். தேவைபட்டால் மட்டுமே தன் சக்திகளை வெளிபடுத்துவர்.
இடைவிடாது பலகாலம் யோகமார்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சியை செய்து அஷ்டமா சித்திகளை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வது இல்லை. நாம் செய்வதற்கு அறிய செயல்கள் என்று நினைபவற்றை சித்தர்கள் சர்வ சாதரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

1. அகஸ்தியர்


பிறந்த மாதம்: மார்கழி
பிறந்த நட்சத்திரம்: ஆயில்யம்
வாழ்ந்த காலம்: 4 யுகம் 48 நாள்
சமாதியான இடம்: திருவனந்தபுரம்


தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார். 
கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தெந்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் 
பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது. 
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார். 
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர் சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. 
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார். 
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.