சனி, 11 ஆகஸ்ட், 2012

சித்தர்கள் யார்?

கடவுளைக் காண முயல்பவர்கள் பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்கள் சித்தர்கள் என்றும் கூறுவர். இல்லற வாழ்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தை விட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்த உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்கள் ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தில் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம்.
நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுகேரிபோன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்து பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளை உடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்கள் இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் இராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!! 
சித்தர்களை வெளிதோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவது இல்லை. ஆனால் மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். தேவைபட்டால் மட்டுமே தன் சக்திகளை வெளிபடுத்துவர்.
இடைவிடாது பலகாலம் யோகமார்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சியை செய்து அஷ்டமா சித்திகளை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வது இல்லை. நாம் செய்வதற்கு அறிய செயல்கள் என்று நினைபவற்றை சித்தர்கள் சர்வ சாதரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களை கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக